திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5,000 அபராதம்!
- Aug 13
- 1 min read

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள விழுந்தமாவடி மீனவ கிராமத்தில், இளைஞர்களிடையே மதுப்பழக்கத்தைத் தடுக்கும் வகையில் புதிய ஊர் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன் மற்றும் பொதுசுகாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஊர் பஞ்சாயத்தார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, 2026 ஆகஸ்ட் 2 முதல் திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்துவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மது அருந்தியது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பான பேனர் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஒலிபெருக்கி மூலமாகவும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாமல், அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் பிரச்சினை செய்தாலும் ரூ.5,000 அபராதம்
இந்த ஊர் கட்டுப்பாடு திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு மட்டுமின்றி, திருமணமானவர்களுக்கும் சில விதிமுறைகளை கொண்டுள்ளது. திருமணமானவர்கள் மது அருந்திவிட்டு வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்சினை செய்து, அது ஊர் பஞ்சாயத்துக்கு வரும் பட்சத்தில் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மது அருந்துபவர்களை கட்டுப்படுத்துவதுடன், கிராமத்தில் மதுப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கமாக கூறப்படுகிறது.
“மதுவை தவிர்ப்போம், நம் எதிர்கால வாழ்க்கையையும் சமூகத்தையும் பாதுகாப்போம்” என்ற கருத்துடன் பொதுமக்களிடம் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது.
கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து எடுத்துள்ள இந்த முடிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, இளைஞர்களை மதுப்பழக்கத்திலிருந்து பாதுகாக்க ஊர் அளவில் கட்டுப்பாடு கொண்டு வந்திருப்பதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.





Comments