நாளை திருமணம்.. இன்று அதிகாலையில் மணமகன் கண்முன்னே உயிரிழந்த மணப்பெண்.. மதுரை அருகே சோகம்!

மதுரை அருகே நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில், இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணப்பெண் கண்முன்னே உயிரிழந்த நிலையில், காயமடைந்த மணமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாளை திருமணம்.. இன்று விபத்து
திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த ஜெப பாஸ்டின் (29), இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் காமலாபுரம் சக்கையா நாயக்கனூரைச் சேர்ந்த மரிய வெல்சியா (26) என்பவருக்கும் செப்டம்பர் 13-ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மரிய வெல்சியா மதுரையில் செவிலியர் தேர்வு எழுதுவதற்காக செல்ல வேண்டியிருந்தது.
அதிகாலை நடந்த கோர விபத்து
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் மணமகன் ஜெப பாஸ்டின் தனது பைக்கில் மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு காமலாபுரத்தில் இருந்து புறப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்–மதுரை தேசிய நெடுஞ்சாலையில், வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி பிரிவு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், பைக் மீது மோதியுள்ளது.
மணமகன் கண்முன்னே உயிரிழந்த மணப்பெண்
கார் மோதியதில் ஜெப பாஸ்டினும், மரிய வெல்சியாவும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மரிய வெல்சியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.





Comments