விடை பெறும் டீசல் பேருந்துகள்? சென்னையில் புதிய திட்டம்!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (MTC) தற்போது இயக்கப்பட்டு வரும் டீசல் பேருந்துகளை படிப்படியாக மின்சார பேருந்துகளாக மாற்றும் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் டீசல் செலவு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த புதிய முயற்சி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது பொதுப் போக்குவரத்தில் டீசல் பேருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் எரிபொருள் செலவு அதிகரிப்பது போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்கனவே இயக்கத்தில் உள்ள பேருந்துகளை முழுமையாக கைவிடாமல், அவற்றின் டீசல் இன்ஜின் உள்ளிட்ட அமைப்புகளை மாற்றி மின்சார இயக்கத்துக்கு கொண்டு வருவது குறித்து சிந்திக்கப்பட்டு வருகிறது.
இந்த முறையில் பழைய பேருந்தின் முக்கிய கட்டமைப்பை பயன்படுத்தி, டீசல் இன்ஜினுக்கு பதிலாக மின்சார மோட்டார் மற்றும் பேட்டரி அமைப்புகளை பொருத்த முடியும். இதன் மூலம் புதிய பேருந்துகளை வாங்குவதற்கான செலவை குறைக்க முடியுமா என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது.
மின்சார பேருந்துகளின் பயன்பாடு அதிகரிப்பதால் எரிபொருள் செலவு மற்றும் நகர்ப்புற காற்று மாசுபாட்டை குறைக்க உதவலாம். இந்தியாவின் பல்வேறு மாநில போக்குவரத்துக் கழகங்களும் பழைய டீசல் பேருந்துகளை மின்சார வாகனங்களாக மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஏற்கனவே மின்சார பேருந்துகளை இயக்கி வரும் நிலையில், பழைய டீசல் பேருந்துகளையும் மின்சாரமாக மாற்றும் திட்டம் நடைமுறைக்கு வந்தால், மாநகர போக்குவரத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனினும், இந்த திட்டம் தற்போது பரிசீலனை நிலையில் இருப்பதால், எத்தனை பேருந்துகள் மாற்றப்படும், எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்த இறுதி முடிவு பின்னர் தெரியவரும்.
இதற்கிடையே, தமிழகத்தில் டீசல் பேருந்துகளை மாற்று எரிபொருளுக்கு மாற்றும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு MTC-க்கு உட்பட்ட 240 டீசல் பேருந்துகளை CNG பேருந்துகளாக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையின் பொதுப் போக்குவரத்தை குறைந்த செலவு, குறைந்த மாசு மற்றும் அதிக எரிபொருள் திறன் கொண்டதாக மாற்றும் நோக்கில் பல்வேறு மாற்று வழிகளை போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.





Comments