தூத்துக்குடி ஆறுமுகநேரியில் இரவில் ஐடி ஊழியரை நடுரோட்டில் இறக்கிவிட்ட அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் இரவு நேரத்தில் ஊருக்குள் பேருந்தை இயக்காமல், ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் ஊழியரை புறவழிச்சாலையில் இறக்கிவிட்டதாக எழுந்த புகாரில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆறுமுகநேரிக்கு டிக்கெட் எடுத்த பெண்
மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் நின்றபோது, ஆறுமுகநேரியைச் சேர்ந்த 21 வயது ஜெனிசர் என்ற ஐடி நிறுவன பெண் ஊழியர் பேருந்தில் ஏறியுள்ளார்.
அவர் ஆறுமுகநேரிக்கு செல்வதற்காக ரூ.30 கொடுத்து டிக்கெட் எடுத்ததாக கூறப்படுகிறது.
ஆத்தூர் பகுதியில் பேருந்து சென்றபோது, ஆறுமுகநேரி ஊருக்குள் பேருந்து செல்லாது என்றும், ஆறுமுகநேரிக்கு டிக்கெட் எடுத்தவர்கள் ஆத்தூரில் இறங்க வேண்டும் என்றும் நடத்துநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இரவு நேரத்தில் நடுரோட்டில் இறக்கிவிட்டதாக புகார்
சில பயணிகள் ஆத்தூரிலேயே இறங்கிய நிலையில், ஜெனிசர் தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்து ஆறுமுகநேரியை கடந்து சாகுபுரம் அருகே சென்றபோதும் அவர் இறங்கவில்லை.
அப்போது, அந்த பெண்ணை ஆறுமுகநேரி ஊருக்குள் இறக்கிவிட்டு செல்லலாம் என நடத்துநர் ஓட்டுநரிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால், ஓட்டுநர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆறுமுகநேரி வடக்கு புறநகர் பகுதியில் உள்ள கடலோர காவல் நிலைய சோதனைச்சாவடி அருகே அந்த பெண்ணை இறக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தந்தைக்கு தகவல்.. சாலை மறியல்
பேருந்தில் நடந்த சம்பவம் குறித்து ஜெனிசர் செல்போன் மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது தந்தை மற்றும் சில அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.
பேருந்து அங்கு வந்தபோது, ஜெனிசர் நடுரோட்டில் இறக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்தவர்கள் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
சுமார் 20 நிமிட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஜெனிசர் மீண்டும் அதே பேருந்தில் ஏற்றப்பட்டு ஆறுமுகநேரி ஜெயின் பஜாரில் இறக்கிவிடப்பட்டார். பின்னர் பேருந்து திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டுச் சென்றது.
ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விசாரணை நடத்தியது.
மதுரை மண்டலம், புதுக்குளம் கிளையைச் சேர்ந்த TN 58 N 2368 என்ற பேருந்து, வழித்தட விதிகளை மீறி ஆறுமுகநேரிக்கு செல்லாமல் புறவழிச்சாலை வழியாக செல்ல முயன்றதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் நலன் மற்றும் வழித்தட விதிமீறலை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பைபாஸ் சாலையில் பயணிகளை இறக்குவது தொடர்கிறதா?
தென் மாவட்டங்களில் சில அரசு பேருந்துகள் இரவு நேரங்களில் ஊருக்குள் செல்லாமல் புறவழிச்சாலைகளில் பயணிகளை இறக்கிவிடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆறுமுகநேரி மட்டுமின்றி நாங்குநேரி, வள்ளியூர், பணங்குடி, காவல்கிணறு உள்ளிட்ட பகுதிகளிலும் இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குறிப்பாக இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் தனியாக பயணம் செய்யும் பயணிகளை பாதுகாப்பான இடங்களில் இறக்கிவிடுவதற்கான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஆறுமுகநேரியில் இரவு நேரத்தில் பெண் ஐடி ஊழியரை புறவழிச்சாலையில் இறக்கிவிட்ட விவகாரத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் போக்குவரத்துத்துறை கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.





Comments