தமிழகத்தில் பத்திரப்பதிவில் மிகப்பெரிய மாற்றம்.. சென்னை, செங்கல்பட்டு, கோவையில் புதிய சிஸ்டம்

தமிழகத்தில் பத்திரப்பதிவு முறையை மேலும் எளிமைப்படுத்தவும், தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும் அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோவையில் நவீன வசதிகளுடன் கூடிய மாதிரி பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
பத்திரப்பதிவு தொடர்பான இந்த அறிவிப்புகளை சட்டசபையில் வணிகவரி, முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வெளியிட்டார்.
25 மாதிரி பதிவு மையங்கள்
தமிழகம் முழுவதும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் 25 மாதிரி பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
முதற்கட்டமாக வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோயம்புத்தூர் (வடக்கு) ஆகிய 5 பதிவு மாவட்டங்களில் இந்த மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்கள் ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்படும் சேவை நிறுவனத்தின் வாயிலாக நிர்வகிக்கப்படும். பொதுமக்கள் மாதிரி பதிவு மையங்கள் அல்லது சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் சேவைகளைப் பெற முடியும்.
வீட்டில் இருந்தே பத்திரப்பதிவு?
பத்திரப்பதிவு முறையில் மிகப்பெரிய மாற்றமாக, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் இணையவழியில் ஆவணங்களை பதிவு செய்யும் திட்டம் அடுத்த 12 மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சொத்து வாங்குபவர்கள் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றி சரிபார்க்கும் நடைமுறையும் மேலும் எளிமைப்படுத்தப்பட உள்ளது.
அக்டோபர் 15 முதல் புதிய நடைமுறை
வங்கிகள் கடன் வழங்கும்போது பயன்படுத்தப்படும் சில முக்கிய ஆவணங்களுக்கு நேரில் வருகை இல்லாத மற்றும் காகிதமில்லா பதிவு முறை அக்டோபர் 15 முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது.
இதில் உரிமை ஒப்படைப்பு ஆவணங்கள், ரசீது ஆவணங்கள், குடும்ப தானப் பத்திரங்கள் மற்றும் பாகப்பிரிவினை ஆவணங்கள் உள்ளிட்டவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு, வாரிசுச் சான்றிதழ் உடனடி சரிபார்ப்பு
இறப்பு மற்றும் வாரிசுரிமைச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை API மூலம் நிகழ்நேரத்தில் சரிபார்க்கும் வசதியும் கொண்டு வரப்பட உள்ளது.
இதனால் போலியான அல்லது சந்தேகத்திற்குரிய ஆவணங்களை பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் தொழில்நுட்ப கண்காணிப்பு வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவில், வக்பு நிலங்களுக்கும் API இணைப்பு
தடை செய்யப்பட்ட நில விவரங்களை நேரடியாக பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரியத்துடன் API இணைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட நிலத்தின் நிலை குறித்து பதிவு செய்யும் முன்பே தகவல்களை சரிபார்க்கும் நடைமுறை வலுப்பெறும்.
IIT மெட்ராஸ் ஆலோசனை
பதிவுத்துறையின் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த IIT மெட்ராஸ் ஆலோசனை நிறுவனமாக நியமிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக பணிச்சுமை உள்ள 25 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் வளங்கள் வழங்கி, பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை அன்றே திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு என்ன பயன்?
புதிய மாற்றங்கள் முழுமையாக நடைமுறைக்கு வந்தால், பத்திரப்பதிவுக்காக அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருப்பது, காகித ஆவணங்களை எடுத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் குறைய வாய்ப்புள்ளது.
ஏற்கனவே பத்திரப்பதிவு துறையில் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் முறைகளை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய அறிவிப்புகள் அந்த நடைமுறையை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன.
சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கப்பட உள்ள இந்த மாதிரி பதிவு மையங்களும், அடுத்தகட்டத்தில் அறிமுகமாகும் ஆன்லைன் பத்திரப்பதிவு வசதிகளும் தமிழகத்தின் சொத்து பதிவு முறையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Comments