காமராஜர் காலை உணவுத் திட்டம்: ஒரு மாணவருக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து எவ்வளவு?

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் தற்போது 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுப்பதாகும். மாணவர்கள் காலை உணவை தவிர்க்காமல் பள்ளிக்கு வருவதையும், அவர்களின் கல்வித் தொடர்ச்சிக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வாரத்தில் என்னென்ன உணவு?
மாணவர்களுக்கு ஒரே உணவு தொடர்ந்து வழங்கப்படாமல், வாரத்தின் வெவ்வேறு நாட்களில் மாறுபட்ட உணவுகள் வழங்கும் வகையில் மெனு தயாரிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை: உப்புமா
செவ்வாய்க்கிழமை: கிச்சடி
புதன்கிழமை: பொங்கல்
வியாழக்கிழமை: உப்புமா
வெள்ளிக்கிழமை: இனிப்பு வகை உணவு
இந்த உணவுகள் மூலம் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகளை வழங்குவது திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
ஒரு மாணவருக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து
காலை உணவின் மூலம் ஒரு மாணவருக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து அளவு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி:
ஆற்றல்: 294 கிலோ கலோரி
புரதம்: 9.85 கிராம்
கொழுப்பு: 5.91 கிராம்
இரும்புச் சத்து: 1.64 மில்லிகிராம்
கால்சியம்: 20.41 மில்லிகிராம்
இதன் மூலம் மாணவர்களின் காலை உணவில் ஆற்றல், புரதம் மற்றும் சில முக்கியமான தாதுச்சத்துகளை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசு காலை உணவுத் திட்டத்தின் மெனுவில் புரதச்சத்தை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆய்வு செய்து வருகிறது. புதிய உணவு வகைகளை உருவாக்க நிபுணர்கள், சமையல் வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து, பரிசோதனை அடிப்படையில் புதிய மெனுக்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
34 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்
தற்போதைய விரிவாக்கத்துக்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 34 லட்சம் மாணவர்கள் இந்த காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், மாணவர்களின் காலை நேர பசியை போக்குவதுடன், அவர்களின் ஊட்டச்சத்து தேவைகளையும் கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.





Comments