சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி! விஜய் வெளியிட்ட மிகமுக்கிய அறிவிப்பு!

தமிழக விளையாட்டுத்துறையில் புதிய முயற்சியாக, சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதேபோல், தமிழ்நாட்டில் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரமும் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஒலிம்பிக் நகரம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உருவாக்கப்பட உள்ள ஒலிம்பிக் நகரத்தில், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், நவீன விளையாட்டு உபகரணங்கள், உயர் செயல்திறன் பயிற்சி மையம் மற்றும் விளையாட்டு அறிவியல், மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.
மேலும், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்குவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படும். சர்வதேச போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர்கள் அதிக பதக்கங்களை வெல்லும் வகையில் இந்த மையம் செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது.
மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி
தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தில், சர்வதேச தரத்திலான கார் பந்தயத் தடம் மற்றும் நவீன பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும்.
Formula 1, Formula 2, Formula 3, Formula 4 உள்ளிட்ட சர்வதேச தரத்திலான போட்டிகளை நடத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பு
மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வமும் திறமையும் கொண்ட தமிழக இளைஞர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகளை வழங்கி தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்களை உருவாக்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
உலகத்தரம் வாய்ந்த கார் பந்தய கட்டமைப்புகள் மூலம் சுற்றுலா, வேலைவாய்ப்பு மற்றும் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கும் வாய்ப்பு ஏற்படும் என அரசு தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் கனவுகளுக்கு பயிற்சி மையம்.. Formula பந்தயங்களுக்கு சர்வதேச தடம்.. தமிழகத்தில் விளையாட்டுத்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய அறிவிப்புகளாக இவை பார்க்கப்படுகின்றன.





Comments