top of page

சாலை போடாத அதிகாரிகளுக்கு கேக் கொடுத்த மக்கள்! சாப்பிட்ட பிறகுதான் தெரிந்த ட்விஸ்ட்

  • Aug 12
  • 1 min read

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியில் மோசமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்காத அதிகாரிகளைக் கண்டித்து பொதுமக்கள் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். சாலையை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


கடம்பத்தூர் முதல்நிலை ஊராட்சியில் உள்ள பவுண்டு சாலை நீண்ட காலமாக குண்டும் குழியுமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், சாலையை சீரமைக்க அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சாலையின் மோசமான நிலையை சுட்டிக்காட்டும் வகையில் அந்தப் பகுதியில் நூதனமான பேனர் ஒன்றையும் மக்கள் வைத்திருந்தனர். இதையடுத்து அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து அளவீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதன் பின்னரும் சாலை சீரமைக்கும் பணி தொடங்கவில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


இதனால் ஆத்திரமடைந்த சிலர், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறி கேக் வெட்டினர். பின்னர் அந்த கேக்கை அலுவலகத்தில் இருந்த அரசு ஊழியர்களுக்கும் வழங்கினர்.


எதற்காக கேக் வழங்கப்படுகிறது என்பது தெரியாமல் அரசு ஊழியர்கள் கேக்கை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. சாப்பிட்ட பின்னரே, சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து அதிகாரிகளின் மெத்தனத்தை சுட்டிக்காட்டும் வகையில் இந்த கேக் வழங்கப்பட்டது என்பது தெரியவந்தது.


சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கவே இந்த நூதன போராட்டத்தை நடத்தியதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சிதிலமடைந்த சாலையை இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.


இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், சாலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகத்தில் பொதுமக்கள் கேக் வெட்டி வழங்கிய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page