top of page

தஞ்சையில் இளைஞரை எஸ்எஸ்ஐ முதலில் தாக்கினாரா? விசிக மறியலில் நடந்தது என்ன? போலீஸ் விளக்கம்

  • Aug 18
  • 1 min read

தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கும் போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு உதவி ஆய்வாளர் அப்துல் ரஹீம் தன்னை முதலில் தாக்கியதாக இளைஞர் தரப்பில் கூறப்பட்ட நிலையில், போலீஸ் தரப்பில் வேறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


எதற்காக விசிகவினர் மறியல்?

தஞ்சாவூர் ரயிலடி பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகையை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதாக கூறப்படுகிறது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன், தொடர்ந்து ரயிலடி சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.


இளைஞர் வந்ததால் ஏற்பட்ட வாக்குவாதம்

அப்போது அந்த வழியாக ஆகாஷ் என்ற 26 வயது இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.


சாலை மறியல் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், அவர் வழிவிடுமாறு கூறியதால் விசிகவினருக்கும் ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் அப்துல் ரஹீம் தலையிட்டு, இளைஞரை அமைதிப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியதாக போலீஸார் கூறுகின்றனர்.


“முதலில் போலீஸ் அடித்தாரா?”

இந்த சம்பவத்தில் முக்கியமாக எழுந்துள்ள கேள்வி இதுதான்.

பல்வேறு தகவல்களின்படி, இளைஞருக்கும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அப்துல் ரஹீம் இளைஞரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.


இதையடுத்து ஆகாஷும் பதிலுக்கு சிறப்பு உதவி ஆய்வாளரை கன்னத்தில் அறைந்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


போலீஸ் தரப்பு விளக்கம் என்ன?

இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் போலீஸார் வெளியிட்ட விளக்கத்தில், ஆகாஷ் தொடர்ந்து ஹாரன் அடித்ததால் விசிகவினருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.


அந்த வாக்குவாதம் மேலும் முற்றாமல் தடுக்க சிறப்பு எஸ்ஐ தலையிட்டதாகவும், அப்போது ஆகாஷ் போலீஸாரை ஒருமையில் பேசி தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிலைமை மேலும் மோசமடையாமல் கட்டுப்படுத்துவதற்காக குறைந்தபட்ச பலத்தை மட்டுமே எஸ்எஸ்ஐ பயன்படுத்தியதாகவும், அதன் பின்னரே ஆகாஷ் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.


இளைஞரை போலீஸார் கைது செய்தது எப்படி?

சிறப்பு உதவி ஆய்வாளரை இளைஞர் தாக்கியதைத் தொடர்ந்து அங்கு இருந்த போலீஸார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.


பின்னர் ஆகாஷை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக ஆகாஷ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page