கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி.. 11 மாவட்டங்களுக்கு ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் அறிவிப்பு

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பிரிவில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ளது.
செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 7 வரை
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் செப்டம்பர் 25-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை இந்த ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.
எந்தெந்த மாவட்டங்கள்?
இந்த ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் 11 மாவட்டங்கள்:
கோவை
திருப்பூர்
சேலம்
ஈரோடு
கிருஷ்ணகிரி
திண்டுக்கல்
நாமக்கல்
நீலகிரி
மதுரை
தேனி
தர்மபுரி
இந்த மாவட்டங்களைச் சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
எந்தெந்த பிரிவுகளில் வேலை?
அக்னிவீர் ஆட்சேர்ப்பில் பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அக்னிவீர் கிளார்க், பொதுப்பணிப் பிரிவு (அனைத்து ஆயுதப் பிரிவுகள்), தொழில்நுட்பப் பிரிவு, டிரேட்ஸ்மேன் மற்றும் மகளிர் ராணுவ காவல்படை ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.
ஆவணங்கள் கட்டாயம்
ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள், joinindianarmy.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கட்டாயமாக கொண்டு வர வேண்டும்.
முழுமையான ஆவணங்கள் இல்லாதவர்கள் அல்லது தவறான படிவங்களை கொண்டு வருபவர்கள் முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
தரகர்களிடம் ஏமாற வேண்டாம்!
ராணுவ ஆட்சேர்ப்பு நடைமுறை முழுமையாக தானியங்கி முறையிலும், வெளிப்படையாகவும் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறும் தரகர்கள் அல்லது மோசடி நபர்களை நம்ப வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் தரவரிசையின் அடிப்படையிலேயே தேர்வு நடைபெறும் என்பதால், கடின உழைப்பும் முறையான தயாரிப்பும் மட்டுமே தேர்வுக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை முதல் தர்மபுரி வரை 11 மாவட்டங்கள்.. கிருஷ்ணகிரியில் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 7 வரை அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம்.. ஏற்கனவே ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு இது முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது.





Comments