சென்னை ஏர்போர்ட்டை தனியாருக்கு மாற்றுவதா? பரந்தூருக்காக விஜய் பதறுனது..! டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையமான AAI-யிடமிருந்து வேறு நிறுவனத்திடம் மாற்றுவது தொடர்பாக முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செயல்பாடு, உள்கட்டமைப்பு அல்லது பயணிகள் வசதிகளில் குறைபாடுகள் இருந்தால், அதனை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று சரி செய்ய வேண்டும் என்றும், பொதுத்துறை நிறுவனத்தை தனியார் வசம் ஒப்படைக்கக் கோருவது ஏற்புடையதல்ல என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
தனியார் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டால் லாபமே முக்கிய நோக்கமாக மாறக்கூடும் என்றும், இதனால் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தினகரன் தனது கருத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கோரி முதல்வர் கடிதம் எழுதியதாக வெளியாகியுள்ள தகவலில் உண்மை இருந்தால், அந்த முடிவை கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பரந்தூர் திட்டம் என்ன ஆனது?
முன்னதாக, சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது. விவசாயிகள் மற்றும் குடியிருப்புகள் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடத்தைத் தேர்வு செய்வதாக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதே நேரத்தில் தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கையும் தொடரும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றுவது தொடர்பான தகவல் வெளியாகியிருப்பது அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்ததாக, சென்னை விமான நிலைய நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பதும், தமிழக அரசின் கோரிக்கை குறித்து அதிகாரப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதும் கவனிக்க வேண்டியதாக உள்ளது.





Comments