மத்திய கைலாஷ் - மெட்ராஸ் ஐஐடி சாலையில் போக்குவரத்து மாற்றம்.. சென்னை வாகன ஓட்டிகள் அறிய வேண்டியவை

சென்னை அடையாறு மற்றும் தரமணி பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், மத்திய கைலாஷ்–ஐஐடி மெட்ராஸ் சுற்றுவட்டாரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 5 வரை 4 நாட்களுக்கு, இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும்.
ஏன் போக்குவரத்து மாற்றம்?
தரமணி ராஜீவ் காந்தி சாலையில் எல்நெட் அலுவலகம் எதிரே சாலைக்கு அடியில் அமைந்துள்ள 900 மி.மீ. விட்டம் கொண்ட கழிவுநீர் குழாயில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் பணியின் ஒரு பகுதியாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாதுகாப்பாகவும் விரைவாகவும் பணிகளை முடிக்க இரவு நேரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
எந்த சாலை மூடப்படும்?
டைடல் பார்க் சந்திப்பு முதல் இந்திரா நகர் சிக்னல் வரை ராஜீவ் காந்தி சாலையின் உள்வரும் வழித்தடம் தற்காலிகமாக மூடப்படும்.
டைடல் பார்க் மற்றும் எல்நெட் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வாகனங்களுக்கு மட்டும் அந்த பகுதியில் செல்ல அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் எங்கு செல்ல வேண்டும்?
டைடல் பார்க் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையின் எதிர்திசை வழித்தடத்திற்கு மாற்றப்பட்டு, இந்திரா நகர் சிக்னல் வரை செல்ல அனுமதிக்கப்படும். அங்கிருந்து மீண்டும் வழக்கமான உள்வரும் பாதையில் செல்லலாம்.
ராமானுஜம் தகவல் தொழில்நுட்ப பூங்கா செல்லும் வாகனங்கள் இந்திரா நகர் சிக்னலில் உள்ள யூ-டர்ன் வழியாக செல்லலாம்.
மத்திய கைலாஷ் பகுதியில் முக்கிய மாற்றம்
மத்திய கைலாஷ் அருகே சர்தார் பட்டேல் சாலையில் அமைந்துள்ள புதிய மேம்பாலமும் இந்த காலகட்டத்தில் மூடப்படும்.
கிண்டியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள், மத்திய கைலாஷ் சந்திப்பில் ராஜீவ் காந்தி சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது.
அதற்கு பதிலாக, அந்த வாகனங்கள்:
அடையாறு சந்திப்பு → எல்.பி. சாலை → சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ → 11-வது குறுக்குத் தெரு → 10-வது குறுக்குத் தெரு → எம்.ஜி. சாலை → கிழக்கு கடற்கரை சாலை → ராஜீவ் காந்தி சாலை
என்ற மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும்.
இலகுரக வாகனங்களுக்கு அனுமதி
கிண்டியில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள் மத்திய கைலாஷ் சந்திப்பில் ராஜீவ் காந்தி சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படும்.
அதன்பிறகு இந்திரா நகர் சிக்னலில் இடதுபுறம் திரும்பி, இந்திரா நகர் 2-வது அவென்யூ → 3-வது அவென்யூ → கலாக்ஷேத்ரா சந்திப்பு → எல்.பி. சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலையை அடையலாம்.
வாகன ஓட்டிகள் கவனிக்க வேண்டியது
இந்த போக்குவரத்து மாற்றம் குறிப்பிட்ட இரவு நேரங்களில் மட்டுமே அமல்படுத்தப்படுவதால், அந்த நேரத்தில் மத்திய கைலாஷ், ஐஐடி மெட்ராஸ், தரமணி, அடையாறு மற்றும் ராஜீவ் காந்தி சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதைகளை பயன்படுத்துவது அவசியம்.
மெட்ரோ ரயில் பணிகளுக்காக மத்திய கைலாஷ்–ராஜீவ் காந்தி சாலை பகுதியில் செய்யப்பட்டுள்ள இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்தை வாகன ஓட்டிகள் கவனத்தில் கொண்டு, இரவு நேரப் பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.





Comments