தண்டலம் பொறியியல் கல்லூரியில் மாணவியை தொடர்ந்து மாணவர் தற்கொலை முயற்சி! காலேஜுக்கு தொடர் விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் அடுத்தடுத்து நடந்த இரு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. முதலில் மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில், அடுத்த நாளே அதே கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மாணவி உயிரிழந்த சோகம்
இந்த கல்லூரியில் ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 19 வயது மாணவி ஷெரின், சில தினங்களுக்கு முன்பு கல்லூரி கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
படுகாயமடைந்த அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் மரணம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த நாளே மாணவர் தற்கொலை முயற்சி
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள், அதே கல்லூரியில் ECE இரண்டாம் ஆண்டு படித்து வந்த 19 வயது மாணவர் சசிதரன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் அவரது கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. முதலில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
வருகைப்பதிவு குறைவு.. பேராசிரியர் கேட்ட கேள்வி
மாணவர் கல்லூரிக்கு சரியாக வராமல் இருந்ததால் அவரது வருகைப்பதிவு குறைவாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேராசிரியர் மாணவரிடம் விளக்கம் கேட்டதாகவும், அதன்பின்னர் அவர் வகுப்பறையை விட்டு வெளியேறி தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த காரணம் தொடர்பாகவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரிக்கு விடுமுறை
ஒரே கல்லூரியில் அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சி சம்பவங்கள் நடந்ததால், கல்லூரி நிர்வாகம் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவித்துள்ளது.
சம்பவங்கள் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே கல்லூரியில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.





Comments