செங்கல்பட்டில் மரகத முருகர் சிலை திருட்டு.. நடுபழனி கோயிலில் நடந்த சம்பவம்.. சிலை மதிப்பு என்ன?

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெருங்கரணை கிராமத்தில் பிரசித்தி பெற்ற நடுபழனி முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூலவர் சிலை மரகதத்தால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோயிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் முருகர் சிலையை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் நடந்த திருட்டு
கோயிலின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், சுமார் 2 அடி உயரமுள்ள மூலவர் சிலையை திருடிச் சென்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சிலையின் மதிப்பு எவ்வளவு?
மரகதத்தால் செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த சிலையின் சரியான மதிப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. போலீசார் தரப்பில் சிலை பல லட்சம் ரூபாய் முதல் கோடிக்கணக்கான ரூபாய் வரை மதிப்புடையதாக இருக்கலாம் என கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிலையின் மதிப்பை கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிரசித்தி பெற்ற நடுபழனி
பெருங்கரணை கிராமத்தில் உள்ள இந்த கோயில் ‘நடுபழனி’ என அழைக்கப்படுகிறது. இங்குள்ள மரகத தண்டாயுதபாணி சிலை 1993-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கோயில் வரலாறு குறித்த பதிவுகள் தெரிவிக்கின்றன.
சிலை திருட்டு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், திருடப்பட்ட மரகத முருகர் சிலையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.





Comments