போராடும் தூய்மை பணியாளர்களை 15 நாளுக்கு பின் சந்தித்த அமைச்சர்கள்! முதல் நாளே வராதது ஏன் என விளக்கம்

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், 15-வது நாளில் அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
15 நாட்களுக்கு பிறகு நேரில் சந்திப்பு
தூய்மை பணியாளர்களை அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர்கள், உடனடியாக நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
“முதல் நாளே ஏன் வரவில்லை?”
தூய்மை பணியாளர்கள் 15 நாட்களாக போராடிய நிலையில், தொடக்கத்திலேயே அமைச்சர்கள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தாதது குறித்து கேள்விகள் எழுந்தன.
இதற்கு அமைச்சர் ராஜ்மோகன், தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளில் நிர்வாகம் மட்டுமின்றி நிதி சார்ந்த பிரச்சினைகளும் இருப்பதாக சட்டப்பேரவையில் விளக்கம் அளித்திருந்தார். பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பணியாளர்களை ஒருங்கிணைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“கஜானா காலியாக உள்ளது” - அமைச்சர் ஆனந்த்
போராட்டக்காரர்களிடம் பேசிய அமைச்சர் ஆனந்த், முந்தைய ஆட்சியில் கஜானா காலி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போதைய அரசு நிதி நிலையை சீரமைத்து வருவதாகவும் கூறினார்.
அதேநேரத்தில், தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும், எவற்றை உடனடியாக நிறைவேற்ற முடியுமோ அவற்றை முதலமைச்சர் விஜய் செய்து தருவார் என்றும் அவர் உறுதியளித்தார்.
“100 நாட்கள் போராட்டம் நடந்தது” - அமைச்சர் ராஜ்மோகன்
இதற்கிடையே, 15 நாட்கள் போராட்டம் நடைபெற்றதை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வியாக எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், முந்தைய ஆட்சிக் காலத்தில் தூய்மை பணியாளர்கள் 100 நாட்கள், 150 நாட்கள் என நீண்ட காலம் போராடியதை சுட்டிக்காட்டினார். மேலும் தற்போதைய அரசு அவர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார்.
“விரைவில் தீர்வு” என உறுதி
தற்போது போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் தொடர்பான கோப்புகள் தயாராக இருப்பதாகவும், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் இணைந்து ஆலோசித்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு அமைச்சர்கள் நேரில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், தூய்மை பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகள் எப்போது முழுமையாக நிறைவேற்றப்படும் என்பதே அடுத்த கேள்வியாக உள்ளது.





Comments