“கெஞ்சி கூத்தாடி ஆட்சியமைத்த விஜய்.. மானம், மரியாதை இழந்து ஆதரவளித்த காங்கிரஸ்” - அப்பாவு அட்டாக்!

தமிழக அரசியலில் ஆளும் தவெக அரசு மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் கட்சிகளை விமர்சித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார். விஜய் மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோரி ஆட்சி அமைத்ததாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவருக்கு ஆதரவளித்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
“ஆதரவு கேட்டு அலைந்த விஜய்”
அப்பாவு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு விசிக, சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளிடம் விஜய் ஆதரவு பெற்றதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அதிமுகவில் உள்ள ஒரு பிரிவின் தலைவர்களிடமும் ஆதரவு கோரியதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தான் விஜய் ஆட்சி அமைத்ததாக அப்பாவு விமர்சித்துள்ளார்.
காங்கிரஸையும் விட்டுவைக்காத அப்பாவு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியையோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரையையோ நேரில் சந்தித்து ஆதரவு கேட்காத தவெக, பின்னர் காங்கிரஸ் ஆதரவைப் பெற்றதாக அப்பாவு கூறியுள்ளார்.
இதனை கடுமையாக விமர்சித்த அவர், விஜய்யின் ஆட்சிக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் தற்போது சட்டமன்றத்தில் விஜய்யை பிரதமர் வேட்பாளராகப் பேசும்போதும் ஆதரவு தெரிவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
விசிக, இடதுசாரிகள் மீதும் விமர்சனம்
விஜய் அரசுக்கு ஆதரவளிக்கும் விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளையும் அப்பாவு தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, ஆட்சிக்கு ஆதரவு அளித்ததற்காக சில கட்சிகள் அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்காமல் இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
“விஜய் பிரதமர் வேட்பாளர்” விவகாரம்
சட்டமன்றத்தில் விஜய்யை அடுத்த பிரதமர் வேட்பாளராக அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்றதாக அப்பாவு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய்யை தேசிய அளவில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
விஜய் ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணி கட்சிகள், தங்களது அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா? அல்லது ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தாலும் அரசை விமர்சிக்கும் உரிமையை தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமா? என்ற விவாதத்தை அப்பாவுவின் இந்த விமர்சனம் மீண்டும் எழுப்பியுள்ளது.





Comments