தவெக ஆட்சிக்கு ஆதரவு.. கட்சிக்கு எதிர்ப்பு.. கம்யூனிஸ்ட் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு.. ஏன் இப்படி?

தமிழக அரசியலில் தற்போது கவனம் பெற்றுள்ள விஷயம், தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், அதே கட்சிகளின் வேட்பாளர்கள் தவெகவை எதிர்த்து இடைத்தேர்தலில் களமிறங்குவது தான்.
இது அரசியல் ரீதியாக முரண்பாடாகத் தோன்றினாலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை “ஆட்சிக்கு ஆதரவு, ஆனால் கூட்டணிக்கு அல்ல” என்ற அடிப்படையில் விளக்கி வருகின்றன.
ஆட்சிக்கு மட்டும் ஏன் ஆதரவு?
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை தவெக திரட்டிய நிலையில், CPI மற்றும் CPM ஆகிய இரு கட்சிகளும் விஜய் தலைமையிலான அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்தன.
அப்போது, இது தவெகவுடன் அரசியல் கூட்டணி அமைப்பதற்கான முடிவு அல்ல என்றும், அமைச்சரவையில் இடம்பெறப் போவதில்லை என்றும் CPM தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
CPI தரப்பிலும், மதச்சார்பின்மை தொடர வேண்டும், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சமூகத்தின் பலவீனமான பிரிவுகளின் பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வெளிப்புற ஆதரவு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வருவதை தடுப்பதா?
கம்யூனிஸ்ட் கட்சிகளின் விளக்கத்தில் முக்கியமாக இடம்பெறும் காரணம் பாஜக.
தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையில், தமிழகத்தில் வேறு ஒரு ஆட்சி அமைந்து அதன் மூலம் பாஜகவுக்கு மறைமுகமாக அதிகாரம் கிடைக்கும் வாய்ப்பைத் தவிர்க்கவே தவெக அரசுக்கு ஆதரவு வழங்கியதாக CPI தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, விஜய்யின் கட்சியின் அனைத்து அரசியல் நிலைப்பாடுகளையும் ஏற்றுக்கொள்கிறோம் என்பதல்ல; தற்போதைய ஆட்சி நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஆதரவு என்பதே அவர்களின் விளக்கம்.
அப்படியென்றால் இடைத்தேர்தலில் ஏன் எதிர்த்து போட்டி?
இதுதான் தற்போதைய அரசியல் பரபரப்புக்கு முக்கிய காரணம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் CPI மற்றும் CPM ஆகியவை தவெக கூட்டணியில் இணையாமல் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன.
தாராபுரத்தில் CPI-யும், மதுராந்தகத்தில் CPM-யும் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. இரு கட்சிகளும் தாங்கள் தவெக, திமுக அல்லது அதிமுக-பாஜக கூட்டணிகளில் எதிலும் இடம்பெறவில்லை என்றும், தனித்த அரசியல் அடையாளத்துடன் தேர்தலை சந்திப்பதாகவும் விளக்கியுள்ளன.





Comments