தங்கம் மீது இந்தியர்களுக்கு ஏன் இவ்வளவு மோகம்? ரூ.90 பில்லியன் டாலரை எட்டும் இறக்குமதி.. உதய் கோட்டக்!

இந்தியாவில் தங்கத்தின் மீதான மக்களின் ஆர்வம் மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், நாட்டின் தங்க இறக்குமதி விவகாரத்துக்கு தீர்வு காண வேண்டும் என்று பிரபல தொழிலதிபரும் கோடக் மகிந்திரா வங்கியின் நிறுவனருமான உதய் கோட்டக் தெரிவித்துள்ளார். 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த தங்க இறக்குமதி மதிப்பு 88 முதல் 90 பில்லியன் அமெரிக்க டாலர் வரை உயரக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தங்க இறக்குமதி ஏன் கவலை?
டெல்லியில் நடைபெற்ற Conference on Financing India's Journey Towards Viksit Bharat மாநாட்டில் பேசிய உதய் கோட்டக், இந்திய குடும்பங்களிடம் மிகப்பெரிய அளவில் தங்கம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த தங்கம் தனிநபர்களுக்கு செல்வத்தை உருவாக்கியிருந்தாலும், பொருளாதாரத்தின் உற்பத்தி நடவடிக்கைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக அவர் கூறினார்.
FY26-ல் 72 பில்லியன் டாலர்
2025-26 நிதியாண்டில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை (Current Account Deficit) சுமார் 25 பில்லியன் டாலர் இருந்ததாக உதய் கோட்டக் குறிப்பிட்டார்.
அதே காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த தங்க இறக்குமதி சுமார் 72 பில்லியன் டாலர் என்ற அளவில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். தங்கத்தை இறக்குமதி கணக்கில் இருந்து நீக்கினால், இந்தியாவுக்கு நடப்புக் கணக்கில் உபரி இருந்திருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
FY27-ல் 90 பில்லியன் டாலரா?
தற்போதைய சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு, 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை சுமார் 60 பில்லியன் டாலர் இருக்கலாம் என உதய் கோட்டக் மதிப்பிட்டுள்ளார். இதில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 90 டாலர் என்ற அனுமானமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தங்க இறக்குமதி மட்டும் 88 முதல் 90 பில்லியன் டாலர் வரை செல்லக்கூடும் என்று அவர் கூறியுள்ளார். இது அதிகாரப்பூர்வ அரசின் கணிப்பு அல்ல; உதய் கோட்டக் மாநாட்டில் தெரிவித்த மதிப்பீடு என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்துக்கு தனி குழு அமைக்க வேண்டுமா?
இந்தியாவின் தங்க இறக்குமதி பிரச்சினையை ஆய்வு செய்ய ஒரு தனிக் குழுவை அமைப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் உதய் கோட்டக் தெரிவித்துள்ளார்.
மக்களின் தங்கம் மீதான தேவையையும், நாட்டின் மூலதன மற்றும் நடப்புக் கணக்கு சவால்களையும் சமநிலைப்படுத்தும் வகையில் தீர்வு காண வேண்டும் என்பதே அவரது கருத்தாகும்.
வீடுகளில் இருக்கும் தங்கத்தை பொருளாதாரத்தில் பயன்படுத்த முடியுமா?
இந்திய குடும்பங்களிடம் இருக்கும் தங்கத்தை பொருளாதார ரீதியாக அதிக பயன் தரும் வகையில் பயன்படுத்துவது குறித்து ஏற்கனவே பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
உதாரணமாக, World Gold Council-ன் 2026 அறிக்கையின்படி, இந்திய குடும்பங்களிடம் சுமார் 31,000 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியை முறையான நிதி அமைப்புக்குள் கொண்டு வருவது தங்க இறக்குமதி மீதான நாட்டின் சார்பை குறைக்க உதவும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறையையும் குறைக்க வேண்டும்
தங்க இறக்குமதி மட்டுமின்றி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நிதிப் பற்றாக்குறை 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும் உதய் கோட்டக் குறிப்பிட்டார்.
நிதி ஒழுங்கை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலை சீர்திருத்தங்கள் மற்றும் முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியர்களின் தங்க சேமிப்பு ஒருபுறம் மிகப்பெரிய தனிப்பட்ட செல்வமாக இருந்தாலும், மறுபுறம் நாட்டின் இறக்குமதி செலவில் முக்கிய பங்கு வகிக்கிறது. FY27-ல் தங்க இறக்குமதி 90 பில்லியன் டாலரை நெருங்கும் என்ற உதய் கோட்டக்கின் மதிப்பீடு, இந்த விவகாரம் குறித்த பொருளாதார விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.





Comments